நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
சென்னை :வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் மலர் வெளியிட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவையில் இன்று நடைப்பெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,” தந்தை பெரியாரின் தொண்டனாக, மாணவனாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. எத்தனையோ கட்சி நிகழ்ச்சிகள் இருந்தாலும் ஆனைமுத்து நூற்றாண்டு விழா எனக்கு மிகவும் முக்கியமான நிகழ்ச்சி.தாய் வீட்டிற்கு வந்தது போல் நான் உணர்கிறேன்.
சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கிய, அதே ஆண்டுதான் ஆனைமுத்து ஐயா அவர்களும் பிறந்தார். இப்போது நாம் சுயமரியாதை இயக்கம் மற்றும் ஆனைமுத்து ஐயா அவர்களின் நூற்றாண்டு விழாக்களை கொண்டாடி வருகிறோம்.
கலைஞரின் பேரனாக மட்டுமில்லாமல் பெரியார், அண்ணா, ஆனைமுத்து அவர்களின் பேரனாக இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். ஆனைமுத்து அவர்கள் எழுத்து பணி மட்டுமல்லாமல் களப்பணிகளிலும் ஈடுபட்டவர். பீகார், டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் சமூக நலப்பணிகள் மேற்கொண்டார்.
கிண்டியில் இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். பாசிச பா.ஜ.கவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு நமக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்துதான் போராடி வருகிறது. தமிழ்நாடு போராடும் உங்களை வென்று காட்டும். நமது போராட்டத்தின் விளைவால் இன்று ஆளுநர் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்.
பழைய அடிமைகள் போதாது என்று தற்போது புதிய அடிமைகளுக்கு வலைவீசிக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. எத்தனை அடிமைகளோடு பா.ஜ.க வந்தாலும் 2026 தேர்தலில் தமிழ்நாடு சுயமரியாதை மண் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டும்.
சுயமரியாதை என்னவென்றே எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. கார் மாறி மட்டும் செல்லவில்லை, விழுகிற காலையும் மாறி விழுகிறார். பெரியார் ஊட்டிய சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டை அவர்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.
கொள்கையற்ற ஒரு இளைஞர் கூட்டத்தை தற்போது உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது கொள்கைகளை உணர வைக்க நாம் முன்ர வேண்டும். தமிழ் மண்ணில் எப்போதும் பாசிசத்தை அனுமதிக்காமல் இருப்பது தான் ஆனைமுத்து அவர்களுக்கு செலுத்தும் மரியாதை , வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் சங்கிகளையும் பாசிட்டுகளையும், அடிமைகளையும் விரட்டியடிப்போம்” என தெரிவித்துள்ளார்.