உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அஜித்குமார்: கார் பந்தய பட்டியல் விவரம் வெளியீடு
சென்னை: வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்று வரும் நடிகர் அஜித் குமார், தனது கார் மற்றும் ரேஸிங் உபகரணங்கள், ஜெர்சி ஆகியவற்றில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை பொறித்துள்ளார். இதை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
அதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள அஜித் குமார், ‘தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு அஜித் குமார் மற்றும் அவரது ரேஸிங் அணி தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது. உங்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்கு துணையாக இருந்து வந்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஜித் குமார் பங்கேற்கும் புகழ்பெற்ற சர்வதேச மோட்டார் விளையாட்டு போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசியன் லெ மான்ஸ் தொடர்: டிசம்பர் 13 மற்றும் 14ம் தேதி சேபாங், மலேசியா. 2026 ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதி துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதி அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
கிரெவென்டிக் 24 மணி நேர தொடர்: டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதி சேபாங், மலேசியா. 2026 ஜனவரி 9 மற்றும் 10ம் தேதி அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ். ஜனவரி 17 மற்றும் 18ம் தேதி துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 2026ல் வரவிருக்கும் பங்கேற்புகள்: மிச்சலின் லெ மான்ஸ் ஐரோப்பிய தொடர் மற்றும் கிரெவென்டிக் 24 மணி நேர ஐரோப்பிய தொடர்.