உதகையில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு: தாவரவியல், ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதி
நீலகிரி: உதகையில் காலை முதலே மழை இல்லாததால் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்தியா வானிலை ஆய்வு மையம் இன்றைய தினம் நீலகிரி மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் நேற்று தினம் மழை தாக்கம் என்பது முழுவதுமாக இல்லாமல் இருந்த நிலையில், இரவில் பரவலாக மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. இந்தநிலையில் தான் இன்று காலை முதலே மழை இல்லாத காரணத்தினால் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை, அடுத்து மாவட்டத்தில் இருக்க கூடிய பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுயிருந்தது. அதேபோல் சுற்றுலா பயணிகளை நலன் கருதி சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் நேற்றைய தினம் அறிவித்து இருந்தார். அதன்படி இன்றைய காலை முதலே அனைத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுயிருந்த நிலையில், மழை இல்லாத காரணத்தால் உதகையில் இருக்க கூடிய அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,தேயிலை பூங்கா ஆகிய மூன்று சுற்றுலா தலங்கள் மட்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து லேசான மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.