உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடம்
ஒட்டாவா : கனடாவை சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற நிறுவனம் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடம் பிடித்துள்ளது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. UAE பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் பறக்கலாம். சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளது. விசா நெறிமுறைகளை கட்டுப்படுத்தியதால் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சரிவை சந்தித்துள்ளன.
இங்கிலாந்து 32வது இடத்திலிருந்து 39வது இடத்திற்குச் சரிந்தது. கனடா ஐந்து புள்ளிகள் சரிந்து 40வது இடத்திற்குச் சென்றது.அமெரிக்கா 41வது இடத்திற்குச் சென்றது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 67வது இடம் தரப்பட்டுள்ளது. அண்டை நாடான இலங்கை 84வது இடத்திலும் பாகிஸ்தான் 91வது இடத்திலும் நீடிக்கிறது. இதனிடையே, ஆசிய பாஸ்போர்ட்டுகள் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. சிங்கப்பூர் 30 வது இடத்திலிருந்து 2 வது இடத்திற்கு வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. மலேசியா 41வது இடத்திலிருந்து 17வது இடத்திற்கு (174) உயர்ந்தது. அதேபோல், ஐரோப்பிய நாடுகள் முதல் 20 இடங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.