எழுத்து பிழையுடன் கூடிய காசோலை வைரல் இமாச்சல் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
சிம்லா: எழுத்து பிழைகளுடன் கூடிய காசோலை சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து இமாச்சல் பிரதேச பள்ளி ஆசிரியரை பள்ளி கல்வி இயக்குனர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இமாச்சல் பிரதேசம், சிர்மாவுர் மாவட்டம் ரோஹ்நட் என்ற இடத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதில் ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் அத்தர் சிங். இந்த நிலையில் பிரதம மந்திரி ஊட்ட சத்து திட்டத்துக்காக கடந்த மாதம் 25ம் தேதி ரூ.7616க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
அத்தர் சிங் ஆங்கிலத்தில் எழுதிய காசோலையில் பல எழுத்து பிழைகள் இருந்தன. அதில் ஏழு என்பதை சேவன் என்றும் ஆயிரத்துக்கு வியாழக்கிழமை என்றும் நூறு’ என்பதை ஹரேந்திரா என்றும் பதினாறு என்பதற்கு பதிலாக அறுபது என்று தவறாக எழுதப்பட்டிருந்தது. பல பிழைகள் இருந்ததால் அந்த காசோலையை வங்கி நிர்வாகம் நிராகரித்துள்ளது. எழுத்து பிழையுடன் கூடிய காசோலை சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, ஆசிரியர் அத்தர்சிங், பள்ளி முதல்வர் குல்தீப் சிங் ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி பள்ளி கல்வி இயக்குனர் அஷிஷ் கோலி உத்தரவிட்டார். இந்த விசாரணையின் போது தான் தவறாக எழுதியதை அத்தர்சிங் ஒப்பு கொண்டுள்ளார். அவருடைய விளக்கத்தை ஏற்காத பள்ளி கல்வி துறை இயக்குனர், அத்தர்சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் மேற்பார்வை அதிகாரியாக இருந்த குல்தீப்சிங் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.