இரட்டை இலை சின்னம் விவகாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்: டெல்லி உயர்நீதிமன்றம் அனுப்பியது
புதுடெல்லி: உயர்நீதிமன்ற உத்தரவின் படி இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி ஆகியவை தொடர்பான வழக்கை தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு தமிழகத்தின் ஆறு எம்பி பதவிகளுக்கான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் ஒரு அவசர மனுவை வழங்கினார். அதில், மாநிலங்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பெயரில் கையெழுத்திட்ட ஏ மற்றும் பி விண்ணப்பங்களை சமர்ப்பித்தால் அதனை தேர்தல் ஆணையம் அகீகரிக்காமல் நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறி புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். மேற்கண்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமீத் சர்மா தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.