நுங்கம்பாக்கத்தில் தனியார் பாரில் போதையில் இளம் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தட்டிக்கேட்ட பார் மேலாளரை தாக்கிய 2 பேர் கைது: தலைமறைவான போக்குவரத்து எஸ்ஐக்கு போலீஸ் வலை
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையிலுள்ள ஒரு தனியார் மதுபாருக்கு நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அரிகரபுத்திரன் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்தார். அப்போது பாரில் இளம் பெண் ஒருவர் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் அரிகரபுத்திரன் மற்றும் அவருடன் வந்த 2 பேர் அந்த இளம் பெண்ணிடம் மது போதையில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து பார் மேலாளர் தருண்குமார்(28) என்பவரிடம் கூறியுள்ளார். உடனே தருண்குமார் போதையில் தொந்தரவு செய்த 3 பேரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து மேலாளர் தருண்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் சம்பவம் குறித்து தருண்குமார் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி பதிவுகளின் படி விசாரணை நடத்திய போது, மது போதையில் இளம் பெண்ணிடம் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரை தொந்தரவு செய்தது உறுதியானது.
அதைதொடர்ந்து போலீசார், நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அரிகரபுத்திரன் மற்றும் அவரது நண்பர்களான ராமநாதபுரம் மாவட்டம் கீரை கோட்டம் பகுதியை சேர்ந்த முகமது அஸ்வான்(33), எழும்பூர் கெங்கு ரெட்டி சாலையை சேர்ந்த பாபு ஆரோக்கியநாதன்(40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து முகமது அஸ்வான், பாபு ஆரோக்கியநாதன் ஆகியோரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள உதவி ஆய்வாளர் அரிகரபுத்திரனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.