இரண்டு அமைச்சர்கள் டார்ச்சர் செய்கிறார்கள்: புதுச்சேரி எம்.எல்.ஏ சந்திரபிரியங்கா வீடியோ
காரைக்கால்: புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏவுமாக சந்திர பிரியங்கா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: சில நாட்களாக அரசியல் ரீதியாக என்னை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். புதுச்சேரியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் என்னை தனிப்பட்ட ரீதியாக டார்ச்சர் செய்து வருகின்றனர். குறிப்பாக எனது அன்றாட வாழ்க்கையை உளவு பார்த்துக் கொண்டும் எனது செல்போனை ஆராய்ந்து கொண்டும் இருப்பது வாடிக்கை கொண்டிருக்கிறார்கள். இது போன்ற நாகரிகமற்ற அரசியலை புதுச்சேரியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் செய்து வருகின்றனர்.
எனக்கு உயிர் பாதுகாப்பு இல்லை என்று புதுச்சேரியை சேர்ந்த ஒரு உயர் அதிகாரியிடம் தெரிவித்தால், அவர்கள் சொத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் வேறு விதமான வார்த்தைகளை பேசியும் வருவது வியப்பை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பது ஊர்ஜிதம் ஆகிறது. இவ்வாறு கூறியுள்ளார். கணவருக்கு மிரட்டல்: புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்.
எம்எல்ஏ சந்திர பிரியங்காவின் கணவரான இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழும் நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சண்முகத்துக்கு கடந்த 15ம் தேதி சந்திர பிரியங்காவின் உறவினரும், என்.ஆர். காங்கிரஸ் நெடுங்காடு தொகுதி இளைஞரணி தலைவருமான ஈஸ்வர் ராஜ் வாட்ஸ்-அப் வாய்ஸ் மெசேஜில் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சண்முகம் புகாரின்படி லாஸ்பேட்டை போலீசார் ஈஸ்வர் ராஜ் மீது ஆன்லைன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.