டூவீலர் திருட்டு வழக்கில் ரூ.20,000 லஞ்சம் கேட்பா? விசாரணைக்கு சென்றவர் விஷம் குடித்து தற்கொலை: காரியாபட்டி காவல்நிலையம் முற்றுகை, மறியல் பஸ் மீது கல்வீச்சு
காரியாபட்டி: காரியாபட்டி அருகே காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அச்சம்பட்டியை சேர்ந்தவர் அழகுப்பாண்டி (34). கூலி தொழிலாளி. இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு டூவீலர் காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காரியாபட்டி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அழகுப்பாண்டியின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிலர், உன் மீது வழக்கு ஏதும் இல்லாமல் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் காவல் நிலையத்திற்கு கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அழகுப்பாண்டி, நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி எர்ரம்மாள் காரியாபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட அழகுப்பாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அழகுப்பாண்டியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி காரியாபட்டி போலீஸ்நிலையத்தை நேற்று உறவினர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து காரியாபட்டி - திருச்சுழி ரோட்டில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது காரியாபட்டியில் இருந்து மதுரை சென்ற பஸ் மீது கல்வீசி தாக்கினர்.
இதனால் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஏஎஸ்பி மதிவாணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.