சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயற்சி
சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்றதுடன், மண்ணெண்ணெயுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் டிஆர்ஓ ரவிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த குழந்தை அம்மாள், தனது மகன் நடேசன் (43) மற்றும் 2 பேரன்களுடன் மனு கொடுக்க வந்தார். நுழைவு வாயில் அருகே திடீரென நடேசன் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி விசாரித்தனர்.
இதுகுறித்து குழந்தை அம்மாள் கூறுகையில், ‘‘எனது மகன் நடேசன் கட்டிட வேலை செய்து வந்தான். வேலை செய்யும் போது கீழே விழுந்ததில் 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறான். இதனிடையே வீட்டை அடமானமாக வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த வீட்டை அவர்கள் கைப்பற்ற முயற்சி எடுத்து வருகின்றனர்.
அதேசமயம், அருகில் இருக்கும் எங்களுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை விற்று கடனை அடைக்கலாம் என முயற்சி செய்தோம். ஆனால் அந்த நிலத்திற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் அடைத்து நிலத்தை விற்க விடாமல் தடுத்து வருகிறார். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
இதனிடையே கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் தனது தந்தையுடன் மனு அளிக்க வந்தார். திடீரென மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனது சகோதரர் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துக் கொண்டதாக குற்றம்சாட்டினார். இதேபோல் வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (40). இவர் தனது தாயுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அவரை போலீசார் சோதனையிட்டபோது, பையில் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது. போலீசார் இதனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கும் அதேபகுதியில் உள்ள ஒருவருக்கும் நில பிரச்னை உள்ளது.
எங்களது நிலத்தையும் சேர்த்து அவர் பட்டா போட்டுள்ளார். மேலும் அரசு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுபற்றி போலீசில் புகார் அளித்தோம். இதனால் அந்த நபர் மிரட்டல் விடுத்து வருகிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.