இரட்டை இலை சின்னம் விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம்
சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் அதிமுக முன்னாள் தலைவர் செங்கோட்டையன் இன்று எழுத்துப்பூர்வ கடிதம் அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அக்டோபர் 31ம் தேதி நீக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.எடப்பாடியின் இத்தகைய முடிவை கண்டித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒரு நோட்டீஸ்கூட அனுப்பாமல் தன்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகக் கூறிய செங்கோட்டையன், அதிமுகவின் கட்சி விதிகள் இதில் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில், சின்ன விவகாரம் தொடர்பாக கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல என்றும், கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க ஆணையத்திடம் கால அவகாசம் கோரினார்.