தாராபுரம், சூலூர் அருகே கிளினிக் நடத்திய பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் சிக்கினர்
*மருத்துவ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தாராபுரம் : தாராபுரம், சூலூரில் போலி கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்து வந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் முத்தையம்பட்டி கிராமத்தில் விநாயகா என்ற பெயரில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருபவர் வெள்ளைச்சாமி (50). இவர் ஆங்கில மருத்துவ உபகரணங்களுடன் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளிப்பதாக இந்த பகுதி மக்கள் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடுமலை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் டாக்டர் ரவி, மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் ஸ்ரீசுகு மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட மெடிக்கலுக்கு வந்தனர்.
அப்போது வெள்ளைச்சாமி ஒரு அறையில் டேபிள், சேர் போட்டு ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அவரை கையும், களவுமாக அதிகாரிகள் பிடித்து விசாரித்தபோது வெள்ளைச்சாமி பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளதும், ஆங்கில மருந்துகளை பயன்படுத்த உரிய கல்வித்தகுதி இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மெடிக்கலுக்கும் சீல் வைத்தனர். போலி பெண் டாக்டர் கைது:
இதே போல, கோவை மாவட்டம் சூலூர் தாலுகா ஜே.கிருஷ்ணாபுரத்தில் போலி கிளினிக் செயல்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனருக்கு ரகசிய தகவல் வந்தது. சூலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கஜேந்திரன் மேற்பார்வையில் அரசு மருத்துவமனை ஆய்வுக்குழு கண்காணிப்பாளர் குமரவேல் மற்றும் வருவாய்துறையினர் குறிப்பிட்ட அந்த கிளினிக்கிற்கு சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
கிளினிக்கை முத்துலட்சுமி (35) என்பவர் டாக்டர் எனக் கூறி நடத்தி வந்துள்ளார். அவரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை செய்தபோது மருத்துவம் படித்ததற்கான எவ்வித சான்றிதழ் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. மருத்துவம் படித்ததாக கூறி போலியாக கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்ததும் உறுதியானது.
இதையடுத்து அங்கு வைத்திருந்த ஊசி, மருந்து மாத்திரை உள்ளிட்ட மருத்துவ பொருட்களை கைப்பற்றிய மருத்துவ குழுவினர் போலி மருத்துவர் முத்துலட்சுமியை சுல்தான்பேட்டை காவல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து முத்துலட்சுமியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மீது நெகமம் போலீஸ் ஸ்டேசனில் போலி கிளினிக் நடத்தியதாக 2 வழக்குகள் பதியப்பட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.