பிரபல பாடகர் மரணத்தில் திருப்பம்; சக இசைக்கலைஞர்கள் இருவர் அதிரடி கைது: இதுவரை 4 பேர் கைதானதால் பரபரப்பு
கவுகாத்தி: சிங்கப்பூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல பாடகர் ஜூபின் கர்க் மரண வழக்கில், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் அவரது சக இசைக்கலைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல அசாம் பாடகர் ஜூபின் கர்க், கடந்த செப்டம்பர் 19ம் தேதி சிங்கப்பூரில் நடந்த இசை விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது, நீச்சல் படகு விருந்தின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் சந்தேக மரணமாக வழக்கு பதியப்பட்டது. சிங்கப்பூர் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அவர் நீச்சல் அடித்தபோது நீரில் மூழ்கி இறந்ததாகவும், இதில் சதி ஏதும் இல்லை என்றும் தெரிவித்தது.
இருப்பினும், அசாம் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த 1ம் தேதி ஜூபின் கர்க்கின் மேலாளர் சித்தார்த்தா சர்மா மற்றும் விழா அமைப்பாளர் ஷ்யாம்கானு மஹந்தா ஆகியோரை டெல்லியில் கைது செய்தது. அவர்கள் மீது கொலை முயற்சி, குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று ஜூபின் கர்க்குடன் நீச்சல் படகில் இருந்த அவரது இசைக்குழுவைச் சேர்ந்த சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக இசைக்கலைஞர் அம்ரித்பிரபா மஹந்தா ஆகிய இருவரையும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.
ஆறு நாட்கள் விசாரணைக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றில், கோஸ்வாமி ஜூபின் கர்க்கிற்கு அருகில் நீந்திக் கொண்டிருந்ததும், அம்ரித்பிரபா அதனை தனது செல்போனில் பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது. சிறப்பு டிஜிபி முன்னா பிரசாத் குப்தா தலைமையிலான புலனாய்வுக் குழு, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலருக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது. மேலும், விழா அமைப்பாளர் ஷ்யாம்கானு மஹந்தாவின் நிதி மோசடிகள் மற்றும் பினாமி சொத்துக்கள் குறித்தும் சிஐடி போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.