இரட்டை சகோதரிகள் மருத்துவ உதவியுடன் தற்கொலை; ‘உயிரோடு பிரியவில்லை உடலையும் பிரிக்காதீர்கள்’: ஜெர்மன் சட்டத்தால் அஸ்தியை சேர்ப்பதில் சிக்கல்
பெர்லின்: வாழ்க்கை முழுவதும் ஒன்றாகவே வாழ்ந்த இரட்டை சகோதரிகளின், தங்கள் சாம்பலை ஒரே கலசத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற கடைசி ஆசை சட்டச் சிக்கலை சந்தித்துள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற இரட்டை சகோதரிகளும், பொழுதுபோக்கு கலைஞர்களுமான ஆலிஸ் மற்றும் எலன் கெஸ்லர் (89), கடந்த 17ம் தேதி மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்துகொண்டு தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல், அருகருகே இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றாகவே வாழ்ந்து வந்த இவர்கள், மரணத்திலும் பிரியாமல் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினர்.
இதற்காக, தாங்கள் இறந்த பிறகு, இருவரின் அஸ்தியையும் (சாம்பல்) ஒன்றாகக் கலந்து ஒரே கலசத்தில் வைத்து, மியூனிக் அருகே உள்ள வால்ட்ஃபிரைட்ஹாஃப் கல்லறையில் உள்ள தங்களது குடும்ப கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தங்களது உயிலில் சட்டப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளனர். ஏற்கெனவே அந்தக் கல்லறையில் அவர்களது தாய் எல்சா கெஸ்லர் (1977ல் இறந்தார்) மற்றும் அவர்களது நாய் யெல்லோ ஆகியவற்றின் எச்சங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. சகோதரிகளின் இந்த உருக்கமான இறுதி ஆசை நிறைவேறுவதில் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
தற்போதைய ஜெர்மன் நாட்டின் சடல அடக்கச் சட்டத்தின்படி, இறந்த பலரின் சாம்பலை ஒரே கலசத்தில் கலந்து வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆசை குறித்து கடந்த 2024ம் ஆண்டு பேட்டி ஒன்றில் பேசியிருந்த சகோதரி ஆலிஸ், ‘ஒரே கலசத்தில் எங்கள் சாம்பலை வைப்பது இடத்தையும் மிச்சப்படுத்தும். இந்தக் காலத்தில் கல்லறையில்கூட நாம் இடத்தை சேமிக்க வேண்டியது அவசியம்’ என்று குறிப்பிட்டிருந்தார். வாழ்நாள் முழுவதும் ஒன்றாகவே இருந்த சகோதரிகளின் கடைசி ஆசை, சட்டச் சிக்கல்களால் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.