தவெகவில் இணைந்தது ஏன்?. . செங்கோட்டையன் விளக்கம்
சென்னை: தவெகவில் இணைந்தது ஏன்? என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். தவெகவில் இணைந்த பிறகு செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் எம்ஜிஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன். 1972ல் அவருக்கு பின் அணிவகுத்து நின்றவன். அவர் பாராட்டும் அளவுக்கு பணிகளை செய்தேன். சத்யா ஸ்டுடியோவில் என்னை கட்டிப்பிடித்து எம்ஜிஆர் பாராட்டினார். அவர் மறைந்த பிறகு 1987ல் ஜெயலலிதா வழியில் நான் பயணத்தை மேற்கொண்டேன். அவரது சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனை கேட்டபோது பல நண்பர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரும் என்னை பலமுறை பாராட்டினார். ஆனால் இன்றைக்கு இருக்கும் நிலை வேறு. ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகும் அதிமுக ஆட்சி நடத்தினோம். ஜெயலலிதா மறைந்த பிறகு 3 கூறுகளாக அதிமுக பிரிந்தது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று கருத்துக்களை வலியுறுத்தினோம்.
இதுகுறித்து கருத்து பரிமாறப்பட்டது, ஆனால் செயல்படுத்த இயலவில்லை. முதலில் எனது பொறுப்புகளை எடுத்தார்கள். எல்லோரும் ஒருங்கிணைங்கப்பட வேண்டும் என்பதற்காக தேவர் ஜெயந்திக்கு சென்று பேசுவிட்டு திரும்பும்போது கட்சியின் உறுப்பினர் பதவியையும் எடுத்து விட்டார்கள். இந்த இயக்கத்துக்காக ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த எனக்கு கிடைத்த பரிசு உறுப்பினர் பதவிகூட எடுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டேன். நான் மட்டுமல்ல, என்னோடு சார்ந்தவர்களின் பதவியும் எடுக்கப்பட்டது. அதோடு நின்றுவிடவில்லை, மகேஷ் என்பவரின் மாமா விபத்தில் இறந்து விட்டார். அவர் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்ததற்காக அந்த இளைஞரின் பொறுப்பும் பறிக்கப்பட்டது.
அதற்கு பிறகு, எனது முடிவை பொறுத்தவரை இன்றைக்கு தெளிவான முடிவை மேற்கொண்டுதான், நேற்றைய தினம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்றைக்கு தவெகவில் இணைந்திருக்கிறேன். ஏன் இங்கு இணைந்தீர்கள் என்ற ஒரு கேள்விகூட எல்லோரும் கேட்கக்கூடும். இதற்கு காரணங்கள் இருக்கிறது. இன்று திமுக, அதிமுக இரண்டும் ஒன்றாக இணைந்துதான் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் இத்தனை நாட்களுக்குள் இணைய வேண்டும் என்று நான் 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை. என்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அவரே (எடப்பாடி) கெடு என்ற வார்த்தையை போட வைத்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.