தவெக கட்சிக்கு கொள்கை கிடையாது: அமைச்சர் நாசர் தாக்கு
சென்னை: தவெக கட்சிக்கு கொள்கை கிடையாது என அமைச்சர் நாசர் கூறினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி ரயில் நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் ஓரணியில் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் நாசர் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி, பூந்தமல்லி தொகுதிகளைச் சேர்த்து 854 பூத்துகளில் 1,42,532 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,38,161 பேர் திமுக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 854 வாக்குச்சாவடிகளிலும் தமிழ்நாட்டை காக்கும் உறுதிமொழி ஏற்பு கூட்டங்கள் இன்று நடக்கிறது. வரும் 17ம் தேதி கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்தும் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் ஒருங்கிணைக்கப்படும்.திமுகவை குறை சொன்னால்தான் வளர முடியும் என்பது அனைத்து கட்சிக்கும் தெரியும். 2026ம் ஆண்டு ஏழாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமையும்.
மீண்டும் தமிழக முதல்வர் ஆட்சி அமைப்பார். தவெக கட்சிக்கு கொள்கை என்பதே கிடையாது. ஒட்டுமொத்த கும்பலுக்கும் புத்தி இல்லை என்பது போன்ற கூட்டம் அது. சினிமாவில் மார்க்கெட் போன பின்னர் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார் விஜய். அரசியல்பற்றி அறிந்து தெரிந்து புரிந்து பேச வேண்டும். அவர் முதலில் அவரது கட்சி கொள்கையை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.