41 பேர் பலியாக காரணமான தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல்
மதுரை: மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளை விடுமுறை கால நீதிமன்ற அலுவலருக்கு அனுப்பியுள்ள இ-மெயில் மனு: கடந்த 27ம் தேதி கரூரில் நடிகர் விஜய்யின் பிரசாரம் நடந்தது. சுமார் 10 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்பர் எனக்கூறி அனுமதி பெற்றுள்ள நிலையில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர். அலட்சியம், சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக, சிறுவர்கள், பெண்கள் உள்பட 41 பேர் உயிர் இழந்துள்ளனர்.
ஒரு வழக்கில், சிறுவர்களை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்ட மும்பை நீதிமன்றம், இது தொடர்பாக கடுமையான வழிகாட்டுதல்களை வகுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதிலும் நடிகர் விஜய்யின் கரூர் கூட்டத்தில் சிறுவர்கள், பெண்கள் பங்கேற்பதை தடுக்க தவறிவிட்டனர். இதன் விளைவாகத்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, 41 பேர் பலியாக காரணமான தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து, பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு ஐகோர்ட் கிளை விடுமுறைகால நீதிமன்றத்திற்கான பதிவுத்துறையின் பரிசீலனைக்கு பிறகு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.