சர்வதேச அரசியலில் திருப்புமுனை; புதிய அத்தியாயத்தை உருவாக்கும் இந்தியா-ரஷ்யா-சீனா கூட்டணி: ரஷ்யாவின் நிரந்தர பிரதிநிதி கருத்து
வியன்னா: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா இடையேயான கூட்டணி சர்வதேச உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது என்று ரஷ்ய பிரதிநிதி கூறினார். சீனாவின் தியான்ஜினில் நேற்றும் இன்றும் நடைபெறும் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளும் போட்டியாளர்கள் அல்ல; வளர்ச்சிப் பங்காளிகள் என்றும், கருத்து வேறுபாடுகள் பூசல்களாக மாறக்கூடாது என்றும் இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். பரஸ்பர மரியாதை மற்றும் நலன்களின் அடிப்படையில் நிலையான உறவைப் பேணுவது, இரு நாடுகளின் வளர்ச்சிக்கும், பன்முனை ஆசியா மற்றும் பன்முனை உலகத்திற்கும் அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
எல்லைப் பிரச்னைக்கு நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காணவும் அவர்கள் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா விசா மீண்டும் தொடங்கப்பட்டதன் அடிப்படையில், நேரடி விமான சேவைகள் மூலம் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், 2026ல் இந்தியா நடத்தவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு சீன அதிபருக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைக்குச் சீனா தனது முழு ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார். மாநாட்டைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினையும் இன்று சந்திக்கிறார்.
இந்நிலையில் வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி மிகைல் உல்யானோவ் அளித்த பேட்டியில், ‘சர்வதேச உறவுகளில் புதிய சகாப்தம் உருவாகி வருவதை காண்கிறோம்’ என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளால் உலகப் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்தித்து வரும் சூழலில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா இடையேயான இந்த வளர்ந்து வரும் கூட்டாண்மை, புதிய உலக ஒழுங்கிற்கான அடித்தளமாக அமைந்துள்ளதாக அவரது கருத்து சுட்டிக்காட்டுகிறது.