துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு... 22 பேர் படுகாயம்
அங்காரா: மேற்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது. துருக்கி நாட்டின் பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள சிந்திர்கி நகரத்தின் மையத்தில் பூமிக்கு அடியில் 5.99 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இஸ்தான்புல், புர்சா, மனிசா, இஷ்மிர் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் இந்த நிலஅதிர்வானது உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவாகியது. இந்த நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
மேலும், கடந்த முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலவீனமான கட்டடங்கள், இந்த முறை ஏற்பட்ட நில அதிர்வால் சரிந்து விழுந்தன. அந்த நேரத்தில் மழை பெய்ததால், மசூதிகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் வீடு திரும்ப விரும்பாதவர்கள் தங்க வைக்கப்பட்டனர். நிலநடுக்கத்தால் அப்பகுதியில் 3 கட்டிடங்கள் பயங்கர சேதம் அடைந்தன. 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.