8 ஆண்டாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி செயல்படத் தொடங்கியது ஜிஎஸ்டி தீர்ப்பாயம்: வரி செலுத்துவோர் குழப்பம் தீருமா?
புதுடெல்லி: எட்டு ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு, சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் செயல்படத் தொடங்கியுள்ளதால், வரி செலுத்துவோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டபோதே, அது தொடர்பான வழக்குகளை விசாரிக்க மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தீர்ப்பாயத்தின் அமைப்பு தொடர்பான சட்ட ரீதியான சவால்களால், கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த தீர்ப்பாயம் செயல்படாமல் இருந்தது. இதனால், வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி தொடர்பான மேல்முறையீடுகளுக்கு உயர் நீதிமன்றங்களை நேரடியாக அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, நாடு முழுவதும் சுமார் 4.8 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்து, தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் முடங்கின.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வை டெல்லியில் முறைப்படி தொடங்கி வைத்தார். டெல்லியில் தலைமை அமர்வு மற்றும் நாடு முழுவதும் 31 மாநில அமர்வுகளுடன் இந்தத் தீர்ப்பாயம் செயல்படும். வரும் டிசம்பர் மாதம் முதல் விசாரணைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுவதும் காகிதமில்லா டிஜிட்டல் முறையில் செயல்படும் இந்தத் தீர்ப்பாயத்தில், பழைய வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய அடுத்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை சிறப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீர்ப்பாயம் செயல்படத் தொடங்கியுள்ள போதிலும், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி விதிகளில் உள்ள குழப்பங்கள் தொடர்வதாகவும், இது புதிய வழக்குகளுக்கு வழிவகுக்கும் எனவும் வரி நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, பென்சில்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டதால், அதன் தயாரிப்பாளர்கள் மரத்திற்கான உள்ளீட்டு வரிக் கடனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தெளிவற்ற விதிகள் வரி செலுத்துவோர் மத்தியில் தொடர்ந்து சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.