அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு
சென்னை: சென்னையில் அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனும் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தனர். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டோம் என டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார். அண்ணாமலை தனது நண்பர் எனவும் டி.டி.வி. கூறியிருந்தார். முடிவை மறுபரிசீலனை செய்ய தினகரனிடம் வலியுறுத்துவேன் என அண்ணாமலை ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், டிடிவி தினகரனை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு நேரில் சந்தித்தார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய தினகரனிடம் அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை - டிடிவி தினகரன் இடையேயான சந்திப்பு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.