அறக்கட்டளை நிலம் தனியாரிடம் ஒப்படைப்பு பொதுமக்கள் நூதன போராட்டம்
*விகேபுரத்தில் பரபரப்பு
விகேபுரம் : அறக்கட்டளைக்கு சொந்தமான 5.51 ஏக்கர் நிலத்தை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்டோர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் விகேபுரம் நகராட்சி முதலியார்பட்டி என்ற முத்து நகரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகேயுள்ள வடமலை சமுத்திரத்தில் அர்த்த சாம பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான 5.51 ஏக்கர் நிலத்தை பல நூற்றாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அந்த இடத்தை இவர்களுக்கு குத்தகைக்கு தராமல் தனி நபர் ஒருவருக்கு குத்தகைக்கு தந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன் குத்தகை பெற்றவர் அவ்விடத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனைக்கண்ட முதலியார்பட்டி மக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் முறையாக பதிலளிக்காததால் ஊர் மக்கள் அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து நேற்று காலை வடமலை சமுத்திரத்தில் உள்ள பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான இடத்தின் அருகே ஊர் தலைவர் பூபதி, செயலாளர் வைகுண்ட ராஜா, பொருளாளர் கண்ணன், முன்னாள் நிர்வாகிகள் பாஸ்கர் பால், தபசு மற்றும் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அவ்விடத்தில் சமையல் செய்து சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கவுன்சிலர் இமாக்குலேட் கூறுகையில், ‘பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான 5.51 ஏக்கர் நிலத்தை முதலியார்பட்டி மக்கள் பல நூற்றாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.
இப்பகுதியில் நெற் களம் அமைத்தும் இங்குள்ள பனை மரங்களை பயன்படுத்தியும் தொழில் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது பிள்ளையன் கட்டளை தனி நபருக்கு இந்த இடத்தை ரசீது போட்டு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த இடத்தை முதலியார்பட்டி மக்களுக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்’ என்றார்.