அமெரிக்க வரலாற்றில் மீண்டும் திருப்பம்;l பாதுகாப்புத்துறை... இனிமேல் போர்த் துறை: பெயரை மாற்றியமைத்து உத்தரவிட்ட டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புத் துறையின் பெயரை மீண்டும் போர்த் துறை என மாற்றுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். அமெரிக்க ராணுவத்தை நிறுவிய அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனால் ராணுவத்தின் நிர்வாக அமைப்பு ‘போர்த் துறை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1947ம் ஆண்டு அதிபர் ஹாரி ட்ரூமன் கொண்டு வந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடற்படைத் துறை, புதிதாக உருவாக்கப்பட்ட விமானப்படைத் துறை மற்றும் போர்த் துறை என அழைக்கப்பட்ட ராணுவத் துறை ஆகிய மூன்றும் ‘தேசிய ராணுவ அமைப்பு’ என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த தேசிய ராணுவ அமைப்பு, 1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ‘பாதுகாப்புத் துறை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்புத் துறையின் பெயரை மீண்டும் ‘போர்த் துறை’ என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு பேசுகையில், ‘ராணுவ அமைப்பை பாதுகாப்புத் துறை என அழைக்கிறோம். ஆனால், இதன் பெயரை மாற்றப் போகிறோம் என நினைக்கிறேன். நாம் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வென்றபோது இது போர்த் துறை என்றே அழைக்கப்பட்டது. என்னைப் பொறுத்தவரை அதுதான் உண்மையான பெயர். பாதுகாப்பு என்பது அதன் ஒரு பகுதி மட்டுமே’ என்று குறிப்பிட்டார். இதே கருத்தை பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத்தும் எதிரொலித்துள்ளார்.
முன்னதாக பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத், பழைய ராணுவ மரபுகளை மீட்டெடுக்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பெயர் மாற்ற நடவடிக்கை பார்க்கப்படுகிறது. முன்னதாக, முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் ஃபோர்ட் பிராக், ஃபோர்ட் ஹூட் போன்ற ராணுவத் தளங்களுக்கு உள்நாட்டுப் போர் காலத்தைய பெயர்களை நீக்கிய முடிவுகளை இவர் மாற்றியமைத்தார். அதேபோல, சமூக செயற்பாட்டாளர் ஹார்வி மில்க் நினைவாகப் பெயரிடப்பட்டிருந்த கடற்படையின் எண்ணெய்க் கப்பலின் பெயரையும் அவர் மாற்ற உத்தரவிட்டார். இதற்கு முன்பு பாதுகாப்புத் துறையின் பெயர் நாடாளுமன்றத்தின் சட்டத்தின் மூலமே மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.