ராஜதந்திர முயற்சிகளை பாராட்டி டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை: ஜப்பான் பிரதமர் திடீர் அறிவிப்பு
டோக்கியோ: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் பிரதமர் சனாயே டகாயிச்சி பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகளுக்காக பல்வேறு நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறார். முன்னதாக பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் அவரது பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் ஜப்பானும் இணைந்துள்ளது.
நோபல் பரிசுக்கான பரிந்துரைகள் 50 ஆண்டுகளுக்கு ரகசியமாக வைக்கப்படும் என்றாலும், பரிந்துரை செய்பவர்கள் சில சமயங்களில் அதனை வெளிப்படையாக அறிவிப்பது வழக்கம். இந்த நிலையில், ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றார். அங்குள்ள அகாசகா மாளிகையில் பிரதமர் சனாயே டகாயிச்சியை சந்தித்துப் பேசினார். அப்போது, டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளைப் பாராட்டிய டகாயிச்சி, ‘இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதும், தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்ததும் வரலாற்று சிறப்புமிக்க சாதனை’ என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, 2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரைத் தாம் பரிந்துரை செய்துள்ளதாக அவரிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார். இந்தத் தகவலை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் கனிம ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், அமெரிக்க-ஜப்பான் கூட்டணிக்கு இது ‘புதிய பொற்காலம்’ என்றும் புகழ்ந்துரைத்தனர்.