போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறும் நிலையில் இந்தியா - பாக். எல்லையை தினமும் கண்காணிக்கிறோம்: அமெரிக்க அமைச்சரின் பேட்டியால் பரபரப்பு
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை மீண்டும் எதிரொலித்த அமெரிக்கா, இருநாட்டு எல்லை நிலவரத்தை தினமும் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான போரை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதுவரை 40 முறை, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணித்ததாக கூறியுள்ளார்.
ஆனால், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நிறுத்துமாறு எந்தவொரு நாட்டின் தலைவரும் இந்தியாவை கேட்கவில்லை என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார். பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை என்றும், வர்த்தகத்திற்காக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவில்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். ஆனால், அமெரிக்காவின் ஆதரவைப் பெறும் நோக்கில், இந்தியாவுடனான போர் நிறுத்தத்திற்கு டிரம்பே காரணம் என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது.
அதன் விளைவாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு முறை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றையும் அமெரிக்கா அறிவித்தது. சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் உடனான உச்சி மாநாட்டின் போது கூட, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது நான்தான் என டிரம்ப் குறிப்பிட்டார். இந்த பின்னணியில், என்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ‘இந்தியா - பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறோம்.
போர் நிறுத்த ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் இருக்கும் சவால்கள் மிகவும் முக்கியமானது; தொடர்ந்து பராமரிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். அதனால் இருநாட்டு எல்லை நிலவரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூள்வதை அதிபர் டிரம்ப் தடுத்தார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. கம்போடியா-தாய்லாந்து, இந்தியா-பாகிஸ்தான், ருவாண்டா-காங்கோ போன்ற நாடுகளில் அமைதியை கொண்டு வந்துள்ளோம். உலகில் அமைதியை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்’ என்றார்.