ரஷ்யா எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை; அமெரிக்காவின் தடையால் பாதிப்பில்லை: புதினுக்கு டிரம்ப் மீண்டும் பதிலடி
வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான பொருளாதார தடையால் பாதிப்பில்லை என தெரிவித்த அதிபர் புதினுக்கு, அதன் விளைவுகள் 6 மாதங்களில் தெரியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுடன் நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகாயில் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து தெரிவிக்கையில், ‘அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நட்புக்கான இலக்கணம் அல்ல; இந்த தடைகள் தீவிரமானவை என்றாலும், ரஷ்யாவின் பொருளாதாரத்தை எந்த விதத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
இருப்பினும், இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது’ என்று கூறினார். இந்நிலையில், புதினின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்தார். அப்போது அவர், ‘அடுத்த 6 மாதங்களில் ரஷ்யாவுக்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகள் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதன் மூலம், இந்த பொருளாதாரத் தடைகளின் ஒட்டுமொத்த விளைவு, வரும் காலங்களில் ரஷ்யாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை டிரம்ப் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. இந்தத் தடையை மீறி, தடைசெய்யப்பட்ட ரஷ்ய நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தின் மீதும் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.