எழுத்தாளருடனான பாலியல் வழக்கில் திருப்பம்; ரூ.41 கோடி இழப்பீடு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு
வாஷிங்டன்: பிரபல எழுத்தாளருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக்கோரி அமெரிக்க அதிபர் டிரம்ப் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஜீன் கரோல், அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், டிரம்பை குற்றவாளியாக அறிவித்து, கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 கோடி) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் தரப்பில் 2வது சுற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நடுவர் மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையை ‘நியாயமானது மற்றும் ஏற்புடையது’ எனக் கூறி டிரம்பின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி டிரம்ப் தரப்பில் நேற்று அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையில் குறிப்பிடத்தக்க சாட்சியப் பிழைகள் இருந்தன. நடுவர் மன்றத்தில் மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலான ஆதாரங்கள் முன்வைக்க அனுமதிக்கப்பட்டது’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்னும் அதிகாரப்பூர்வமாக விசாரணைக்கு ஏற்கவில்லை. மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா என்பது குறித்த தகவல் இனிமேல்தான் தெரியவரும். மேலும், இந்த மனுவுக்கு கரோல் தரப்பில் இருந்து வரும் வாரங்களில் பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.