டிரம்ப்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்கிறார்கள்
லண்டன்: ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரி்க்க அதிபர் டிரம்ப் கடந்த 15ம் தேதி அலாஸ்காவில் சந்தித்து பேசினார். இரு தலைவர்களின் சந்திப்பின் போது போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை.ஆனால், இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்பை இன்று சந்தித்து பேச உள்ளார்.
இந்த நிலையில்,இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். வீடியோ அழைப்பு மூலம் நடத்திய இந்த ஆலோசனையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக்ஸ் மெர்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபரின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.
புடின் தனது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நிறுத்தும் வரை, ரஷ்ய பொருளாதாரம் மற்றும் அதன் மக்கள் மீது ஏற்கனவே தண்டனைக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தடைகளுடன் அவரது போர் இயந்திரத்தில் திருகுகளை இறுக்கிக் கொண்டே இருப்போம் என தெரிவித்துள்ளார். ஜெலன்ஸ்கி இன்று டிரம்பை சந்திக்கும் போது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியான் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் உடன் இருப்பார்கள். ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளையடுத்து ஐரோப்பிய தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு அவருடன் செல்ல முடிவெடுக்கப்பட்டது என உர்சுலா தெரிவித்தார்.