டிரம்ப்-மம்தானி சந்திப்பு: இதுதான் ஜனநாயகம் என சசிதரூர் பாராட்டு
புதுடெல்லி: டிரம்ப்-மதானி சந்திப்பு குறித்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் பாராட்டு தெரிவித்து இதுதான் ஜனநாயகம் என தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சோரான் மம்தானி சமீபத்தில் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக நேற்று சந்தித்து பேசினார். அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருக்கும் டிரம்ப், மம்தானி சந்திப்பு அந்நாட்டு அரசியலில் அனைவராலும் உற்று பார்க்கப்பட்டது. இந்த சந்திப்பை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசிதரூர் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக, சசிதரூர், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஜனநாயகம் என்பது இப்படித்தான் செயல்பட வேண்டும். தேர்தலின் போது எந்த வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் உங்கள் கருத்தை முன்வைத்து போராடுங்கள். தேர்தல் முடிந்த பின், நாட்டின் பொதுவான நலன்களை நிறைவேற்ற, மக்களிடம் அளித்த வாக்குறுதிகளின்படி ஒத்துழைப்புடன் இருக்க கற்று கொள்ளுங்கள். இதுபோன்ற சந்திப்புகளை இந்தியாவில் அதிகம் பார்க்க விரும்புகிறேன். என் அளவிலான பங்களிப்பையும் செய்ய முயற்சித்து வருகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.