டிரம்ப் பேச்சை திருத்திய விவகாரம்; பிபிசி இயக்குநர் , பெண் சிஇஓ ராஜினாமா
லண்டன்: கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அதிபர் டிரம்ப் ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்தது என பிபிசி பனோரமா ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் டிரம்ப் பேசிய 2 தனித்தனி வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. ஒரு மணி நேர இடைவெளியில் டிரம்ப் பேசிய பேச்சுகளில், ‘அனைவரும் அமைதியாக போராட வேண்டும்’ என அவர் கூறிய பேச்சுகள் கத்திரிக்கப்பட்டு, ‘கடுமையாக போராடுவோம்’ என்கிற பேச்சுகள் மட்டும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், டிரம்ப் பேச்சை எடிட் செய்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தலைமைப் பதவியில் இருக்கும் 2 நபர்கள் ஒரே நாளில் பதவி விலகியது பிபிசி நிர்வாகத்தில் பெரும் காலியிடத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த ராஜினாமாவை வரவேற்றுள்ள அதிபர் டிரம்ப், தனது பேச்சை திரித்து வெளியிட்டவர்கள் மாட்டிக் கொண்டதால் ராஜினாமா செய்திருக்கிறார்கள் என கூறி உள்ளார். போலி பத்திரிகையாளர்களுக்கு எதிராக டிரம்ப் போராடி வருவதாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறி உள்ளார்.
டிரம்ப் மிரட்டல்: தனது பேச்சை திரித்து வெளியிட்டது தொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து பிபிசிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிபிசி தெரிவித்துள்ளது.