லாரி மீது மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து ரயில் பாதையில் விழுந்தது
மானாமதுரை : மானாமதுரை ரயில்வே கேட் அருகே மின்கம்பியில் உரசி லாரியில் தீ விபத்து நடந்ததால், முன்னெச்சரிக்கையாக பயணிகள் ரயில் திருப்பாச்சேத்தியில் நிறுத்தப்பட்டது.திருச்சி மாவட்டம், மருங்காபுரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). வைக்கோல் வியாபாரி.
இவர் நேற்று மதியம் 2 மணிக்கு மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் வைக்கோல் கட்டுகளை வாங்கி தனது லாரியில் ஏற்றிக் கொண்டு மதுரைக்கு சென்றார். கட்டிக்குளம் ரோட்டில் உள்ள முத்தனேந்தல் சுடுகாடு அருகே சென்றபோது மின்கம்பியில் லாரி உரசியுள்ளது. இதில் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து மளமளவென எரியத் துவங்கியது.
மதுரை - மானாமதுரை ரயில்பாதையில் உள்ள முத்தனேந்தல் ரயில்வே கேட்டை கடக்கும்போது எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகள் ரயில்பாதையில் விழுந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கேட் கீப்பர் லாரியை நிறுத்துமாறு கூறினார்.
ரயில்பாதையில் வைக்கோல் கட்டுகள் எரிவதை பார்த்த கேட் கீப்பர், மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயிலை திருப்பாச்சேத்தி ரயில்நிலையத்தில் நிறுத்தினர்.
முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையம் முன் நிறுத்தப்பட்ட லாரியில் தீ எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், குடங்களில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
அதற்குள் தீயணைப்புத்துறையினர் வந்து தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.
திருப்பாச்சேத்தி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் பயணிகள் ரயில் 20 நிமிட தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக மானாமதுரை ேபாலீசார், ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.