தீபாவளி பண்டிகைக்கு எதிராக இந்தியர் குறித்து கனடா யூடியூபர் சர்ச்சை பதிவு: ஆதரித்த திரிணாமுல் எம்பி திடீர் பல்டி
புதுடெல்லி: தீபாவளி பண்டிகைக்கு எதிராக கனடா யூடியூபர் வெளியிட்ட இனவெறி பதிவை ஆதரித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, சர்ச்சை வெடித்ததும் தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த யூடியூபர் நேட் என்பவர், தீபாவளி பண்டிகையை இழிவுபடுத்தும் வகையிலும், இந்தியர்களை ‘மூளைச்சாவு அடைந்தவர்கள்’ என்றும் குறிப்பிட்டு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த இனவெறி பதிவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆதரித்து மறுபதிவு செய்திருந்தார். மஹுவாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பாஜக வெளியிட்ட பதிவில், ‘இந்தியா மற்றும் இந்து மதத்திற்கு எதிரான உணர்வுகளை’ மஹுவா ஊக்குவிப்பதாகக் கூறி தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. சமூக வலைத்தளங்களில் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் அரசியல் கண்டனங்களைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா தனது செயலுக்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட விளக்கத்தில், ‘நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது எனது சமூக ஊடகப் பக்கத்தில் பல காணொளிகள் தோன்றின.
இனவெறிக் கருத்துகள் கொண்ட அந்தப் பதிவிற்கு கீழே இருந்த வேறு ஒரு காணொளியை ஆதரிக்க நினைத்தேன். தற்போது வரை கவனிக்காமல் இருந்துவிட்டேன். இது எனது தவறுதான்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்த கருத்துக்காக பாஜகவின் விமர்சனத்திற்கு உள்ளான மஹுவா மொய்த்ரா, தற்போது மீண்டும் ஒரு சமூக வலைத்தள சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.