திருச்சி சிறையில் கைதி மீது தாக்குதல் அதிகாரி உட்பட 22 பேர் மீது வழக்கு
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர் மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன். இவர், மதுரை சிறையில் 10ம் வகுப்பு முடித்து விட்டு சிறையில் ஐ.டி.ஐ படிக்க விருப்பப்பட்டார். இதனால் ஹரிஹரசுதன், கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் ஹரிஹரசுதனை சிறைத்துறை அலுவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் ஹரிஹரசுதனை சந்திக்க வந்த அவருடைய பெற்றோர், வக்கீல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது தாய், இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரணை நடத்த திருச்சி போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஹரிஹரசுதனை தாக்கியதாக திருச்சி மத்திய சிறை, துணை சிறை அலுவலர் மணிகண்டன், தலைமை காவலர் அருண்குமார் உட்பட 20 சிறை காவலர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் நேற்று போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.