திருச்சி பெருமாள் கோயிலில் பெண்ணுடன் ஊழியர் உல்லாசம்: வீடியோ வைரல்
சமயபுரம்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து திருவெள்ளறையில் அமைந்துள்ள பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் நான்காவது திருத்தலமானது. 1000 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலுக்கு சொந்தமாக நந்தவனமும் உள்ளது. இக்கோயிலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த 54 வயதுடையவர் ஒருவர் பட்டப்பகலில் கோயிலுக்கு வந்த ஒரு பெண்ணுடன் நந்தவனத்தில் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இந்த வீடியோவால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயிலில் புனிதம் கெட்டு விட்டதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து திருவெள்ளறை கோயில் மேற்பார்வையாளர் கூறும்போது, ‘நான் 2016இல் பணிக்கு சேர்ந்தேன். இதுவரை என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. எனக்கு 54 வயதாகிறது. எனக்கு திருமணம் ஆகவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன். இதுபோன்று இதுவரை நடந்ததில்லை. அதற்காக வருந்துகிறேன். இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் இருக்கும்’ என்றார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம் குமாரிடம் கூறும்போது, ‘15 நாட்களுக்கு முன் புகார் வந்தது. புகார் வந்தவுடன் அவரை எனது நேரடி கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பணிமாற்றம் செய்துள்ளேன்’ என்றார்.