‘‘திருச்சியில் வளர்ச்சி பணிகளை விஜய் பார்க்கல, பார்க்கல’’ அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
திருச்சி: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் இன்று அளித்த பேட்டி: திமுகவை எதிர்கட்சிகள், எதிரிகள் விமர்சிப்பது வழக்கமான ஒன்று தான். விஜய், “கேட்கல கேட்கல” என்று சொல்வதை காட்டிலும், கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் திருச்சி மாவட்டத்துக்கு திமுக செய்துள்ள வளர்ச்சி திட்டங்களை அவர் பார்க்கல, பார்க்கல என்றே கூற வேண்டும். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், திருவெறும்பூரில் மாதிரி பள்ளி இப்படி பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை, அமைச்சர்களால் எந்த பிரயோஜனமும் இல்லையென விஜய் சொல்வதை அறிவு சார்ந்த திருச்சி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2 அமைச்சர்கள் இருந்து எங்களால் எந்தளவுக்கு மாவட்ட முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அனைத்தையும் செய்து வருகிறோம்.இதுபோன்ற பிரசார கூட்டத்துக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும். நிபந்தனைகளை விதித்தபோதிலும் விஜய் கூட்டத்துக்கு வந்தவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர்.
நிதி விடுவிப்பு போன்ற பிரச்னைகளில் ஒன்றிய அரசு, ஆளும் திமுக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த போக்கை மக்களிடம் எடுத்து சொல்லும் விதமாக ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று அவர்களை ஓரணியில் தமிழ்நாடு என்கிற இயக்கத்தில் இணைக்க வேண்டுமென திமுக தலைமை வலியுறுத்தியது.அந்த வகையில் மணப்பாறை, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு கொடுக்கப்பட்ட குறைந்தபட்ச இலக்கு 3,29,000 உறுப்பினர்கள். ஆனால் அதை கடந்து தற்போது 3,59,000 பேரை இணைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.