திருச்சி அருகே விபத்தில் சிக்கியவரை மீட்க சென்றபோது அடாவடி: எடப்பாடி பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு
* அதிமுகவினர் தாக்குதலில் காயமடைந்த டிரைவர், டெக்னீசியன் மருத்துவமனையில் அனுமதி
துறையூர்: திருச்சி அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின் போது வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து அதிமுகவினர் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் தாக்குதலில் காயமடைந்த டிரைவர் மற்றும் டெக்னீஷியன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சி மண்ணச்சநல்லூர் கடைவீதியில் பிரசார பயணம் மேற்கொண்டார். எதுமலை பிரிவு சாலையில் அவர் பேசும்போது, அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசோடு இணக்கமாக இருந்தோம். இன்றைய அரசு ஒன்றிய அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்கிறது என்றார். இதனை தொடர்ந்து அவர் துறையூர் சென்றார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பாக துறையூர் அருகே ஆத்தூர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக துறையூரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் அதிமுக தொண்டர்கள் கூட்டம் வழியாக சென்றுள்ளது.
அப்போது திடீரென ஆம்புலன்ஸை வழிமறித்த அதிமுக தொண்டர்கள் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் கதவை திறந்து டிரைவரை தாக்கினர். அதேவேளை ஆம்புலன்சை சூழ்ந்து கொண்ட தொண்டர்கள் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். சிலர் ஆம்புலன்ஸ் மீது கையால் அடித்தனர். சிலர் தாங்கள் வைத்திருந்த கொடிக்கம்பால் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் வேனில் சைடு மிரர் (கண்ணாடி) உடைந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிமுக தொண்டர்களை விலக்கி ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதில் காயம் அடைந்த துறையூரை சேர்ந்த டிரைவர் செந்தில், கலிங்குடையான்பட்டியை சேர்ந்த டெக்னீசியன் ஹேமலதா ஆகியோர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது ஹேமலதா கர்ப்பமாக உள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பிரதான சாலையின் நடுவே கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, நோயாளியை ஏற்றிச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்து கோபமடைந்து டிரைவரிடம் இனி நோயாளி இல்லாமல் கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்தால் டிரைவர்தான் பேஷண்டாக போவார் என்று பகிரங்கமாக மிரட்டினார். இந்நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸை சூழ்ந்து கொண்டு கட்சியினர் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* சாவியை பிடுங்கி எறிந்த அதிமுகவினர்
பிரசார பகுதியில் ஆம்புலன்ஸ் வந்ததை பார்த்தவுடன் டென்ஷனான அதிமுக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அதிமுக பிரமுகர் ஆம்புலன்ஸ் கதவு வழியாக கையை நுழைத்து, சாவியை பிடுங்கினார்.
அத்தோடு மட்டுமல்லாமல் பிடுங்கிய சாவியை ஆத்திரத்தில் தூரத்தில் வீசி எறிந்தார். இதனால் நிலமை பதற்றமாவதை கண்டு போலீசார், ஆம்புலன்சை எடுக்க சொல்லி, டிரைவரிடம் கூறிய போது, சாவி இல்லாமல் டிரைவர் செய்வதறியாமல் திகைத்தார். பின்னர் மாற்றுச்சாவி வைத்திருந்ததை எடுத்து வேனை ஓட்டிச் சென்றனர்.