திருச்சி - சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தம்: பயணிகள் அவதி!
திருச்சி: திருச்சியில் இருந்து இன்று சார்ஜாவிற்கு கிளம்பிய ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் கிளம்பிய ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் புறப்பட்ட தயாரான சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானி விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தினார். பயணிகள் விமானத்திற்குள் அமர்ந்திருந்த நிலையிலேயே, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பழுதுநீக்கும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் பணிகள் முடிவடையாததால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.