திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசு பஸ் மீது கார் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி
சமயபுரம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் ஜோசப் (21). சென்னையில் வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த 29ம்தேதி தென்காசியில் நடந்த நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றிருந்த ஜோசப், அங்கிருந்து நேற்றுமுன்தினம் மாலை சென்னை புறப்பட்டார். அப்போது ஜோசப்பின் அண்ணனின் நண்பர்களான செல்வராஜ்(37), விஜயபாபு(31) ஆகியோரும் உடன் வருவதாக கூறினர். இதையடுத்து ஜோசப் தனது காரில் செல்வராஜ், மனைவி யசோதா(29), ஒன்றரை வயது பெண் குழந்தை அனோனியா மற்றும் விஜயபாபு ஆகியோரையும் ஏற்றிக்கொண்டார்.
கார் நேற்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி மாவட்டம், சிறுகனூர் அடுத்த நெடுங்கூர் பகுதியில் வந்தபோது சாலையோரம் பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கி யசோதா, விஜயபாபு, ஒன்றரை வயது குழந்தை அனோனியா ஆகியோர் பலியாகினர். டிரைவர் ஜோசப், செல்வராஜ் ஆகியோர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.