குமரலிங்கம் வாய்க்காலில் மரங்கள் வீச்சு: பாசன நீர் தடைபட்டு பயிர்கள் கருகும் அபாயம்
உடுமலை: குமரலிங்கம் ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்லாத அளவுக்கு, மரங்கள் வெட்டி போடப்பட்டுள்ளதால், பாசன நீர் செல்வது தடைபட்டு பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து, குமரலிங்கம் ராஜவாய்க்கால் பாசனத்துக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 1,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பாசன பகுதியில், நெல் சாகுபடி அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது குமரலிங்கம் ராஜவாய்க்கால் பாசன பகுதியில் 135 நாட்கள் வயதுடைய குண்டு ரக நெல்லை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். 45 நாட்கள் வளர்ந்த நிலையில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக ராஜவாய்க்காலில் தண்ணீர் சீராக வரவில்லை. இதனால் பயிர்களுக்கு போதுமான அளவில் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு, பயிர்கள் கருகும் நிலை உருவானது. இதைத்தொடர்ந்து ராஜவாய்க்கால் பகுதியில் விவசாயிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஆலங்கால் வாய்க்கால் பகுதியில் மரங்கள் மற்றும் முள் செடிகளை வெட்டி வாய்க்காலுக்குள் போடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
குமரலிங்கம் ராஜவாய்க்கால் நீர் வழிப்பாதையில் மொத்தமுள்ள, 54க்கும் மேற்பட்ட மடைகளில், 16 மடைகளுக்கும் மேல் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த நேரத்தில், தண்ணீர் பாய்ச்சாவிட்டால், நெல் பயிர் முழுவதுமாக கருகி நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் ராஜவாய்க்காலுக்குள் வெட்டி போடப்பட்ட மரங்களை பொது பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் வாய்க்கால் நீர் வழிப்பாதையில் அடைப்பை ஏற்படுத்த மரங்களை போட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.