மரம் வளர்ப்புக்காக நெடும்பயணம்!
புதுக்கோட்டையில் மரம் ராஜா என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. மரம் வளர்ப்பை ஒரு சேவையாகவே செய்து வரும் இவர் போன்றவர்களை ஊர் மறக்குமா?என்ன! பஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இவரது சிறு பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள் புதுக்கோட்டையின் பல பகுதிகளில் மரமாகின்றன. யார் வந்து கேட்டாலும் இலவசம்தான். அதற்கு சில நிபந்தனை மட்டும் விதிக்கிறார். இதனால் மர வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே இந்தக் கன்றுகளை வாங்கிச் செல்கிறார்கள். இது குறித்து அறிந்து மரம் ராஜாவை சந்தித்தோம். மரம் ராஜாவாக அவர் உருவான கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
``2019ல் புதுக்கோட்டை ராஜவீதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு ஏறக்குறைய மயங்கும் நிலையில் வந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து, என்ன? ஏதென்று விசாரித்தோம். அரசு மருத்துவமனைக்கு வந்த அவர், அந்த வீதியில் மரம் எதுவும் இல்லாததால் கடுமையாக சோர்வடைந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் என்னை பெரிதும் பாதித்தது. உடனே `கீழ ராஜவீதியில் மரம் வைப்போமா?’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் துவக்கினோம். அதில் இணைந்த பலர் இது நல்ல யோசனை, செயல்படுத்தலாம் என உற்சாகம் தந்தார்கள். அதன்படி கீழ ராஜவீதியில் மரம் வளர்க்கத் தொடங்கினோம். இப்போது அந்த வீதி மரங்கள் நிறைந்த வீதியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் நான் அருகில் உள்ள கல்லுக்குடியிருப்பு என்ற கிராமத்திற்கு சென்று மரக்கன்றுகளை வாங்கி வந்து பல இடங்களின் நட்டேன். அதிலும் குறிப்பாக அப்துல்கலாம் நினைவுநாளுக்காக விடிய விடிய பெய்த மழையில் நனைந்துகொண்டே மரக்கன்றுகள் நட்டேன். எனது மரம் நடும் ஆர்வத்தைப் பார்த்து பலரும் பல வகைகளில் உதவ முன்வந்தார்கள். ஜெயராமன் என்பவரது இடத்தை மரக்கன்று உற்பத்திக்காக கொடுத்தார்கள். அதில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் தாய்மடியை உருவாக்கினேன். மரக்கன்றுகளை மரக்குழந்தை என்றுதான் அழைப்பேன். அதை உருவாக்கும் இடத்தை தாய்மடி என்று அழைக்கிறேன்.
இந்தத் தாய்மடியில் அழிவின் விளிம்பில் உள்ள பல அரிய வகை மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வளர்ப்புக்காக இலவசமாக வழங்குகிறேன். மரம் வளர்ப்புக்கு வந்தபிறகு மரங்கள் குறித்த பல புத்தகங்களை படித்தேன். அதில் பல மரங்கள் தற்போது அழியும் நிலை குறித்து அறிந்து பாரம்பரிய மரங்களைத் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தேனி, குற்றாலம்,கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பல அரிய வகை மரங்களின் விதைகளை சேகரித்தேன். தமிழ்நாடு முழுக்க உள்ள மர வளர்ப்பு ஆர்வலர் களின் நட்பு கிடைத்தது. அவர்களோடு இணைந்து பாரம்பரிய மரங்களை மீட்கும் பணிகளை செய்து வருகிறேன். இலுப்பை மரங்கள் தற்போது குறைந்து வருவதால் பிரான்மலை பகுதிக்கு சென்று இலுப்பை விதைகளை சேகரித்து, கன்றுகளை உற்பத்தி செய்தேன். தென்காசி காட்டுப்பகுதிக்கு சென்று நறுவிழி, பூதகரப்பான் போன்ற மர விதைகளை சேகரித்தேன்.
கொரோனா காலத்தில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் போலீஸ் காரர்களிடம் என் மரப்பிள்ளைகள் செத்துவிடும் எனக்கூறி தண்ணீர் ஊற்ற செல்வதற்காக சிறப்பு அனுமதி வாங்கினேன். தமிழகத்தில் கொரோனா சமயத்தில் முதன்முதலில் கொடுக்கப்பட்ட அனுமதி இதுவாகத்தான் இருக்கும். இதற்காக விசேஷ உடை அணிந்து செல்வேன். நான் வைத்த பல கன்றுகள் வளர்ந்து மரமாகி இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மரம் வைக்க வேண்டும் என என்னிடம் கன்று கேட்க வருபவர்களிடம் ஒரு நிபந்தனையை கட்டாயம் விதிப்பேன். அதாவது 2×2×2 அடி அளவுகளில் குழி எடுத்திருக்க வேண்டும். கன்றுகளை வளர்த்தெடுக்க நீர் ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும். கோயில், கண்மாய் போன்ற இடங்களில் மரம் வளர்க்க விரும்பினால் கூண்டு வைக்க வேண்டும். இத்தனையும் கடைபிடித்தால்தான் கன்று வழங்குவேன். வறட்சி மாவட்டம் என்ற பெயர்பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் அதிக மரங்கள் நிறைந்த பசுமை மாவட்டம் என்ற பெயரை வாங்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இது கண்டிப்பாக நடக்கும்’’ எனக்கூறி புன்னகைக்கிறார்.
தொடர்புக்கு:
மரம் ராஜா: 88387 34395.
மரக்குழந்தை
மரக்கன்றுகளை எப்போதும் மரக்குழந்தைகள் என்றே அழைக்கும் மரம் ராஜா, நமது குழந்தை போல பாவித்து கன்றுகளை வளர்க்க வேண்டும். அதன் வளர்ச்சிக்கு உரிய நேரங்களில் உரிய வசதிகளை செய்ய வேண்டும் என்கிறார்.
ஊக்கம்
காலை 5 மணிக்கு புதுக்கோட்டை மார்க்கெட்டுக்கு காய்கறி கமிஷன் விற்பனைக்கு செல்லும் மரம் ராஜா, 10 மணிக்கு பிறகு மர வளர்ப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடத் தொடங்கி விடுகிறார். பல்வேறு கிராமங்களில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் மரம் வளர்க்க ஊக்குவிக்கிறார். இவரது மரம் வளர்ப்பு சேவைக்காக பல்வேறு அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்து வருகின்றன.