வெளிப்படையான பொருளாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்: பிரிக்ஸ் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!
டெல்லி: உலக நாடுகள் வெளிப்படையான பொருளாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பால் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரேசில் அதிபர் லூலா த சில்வா, தலைமையில் பிரிக்ஸ் அமைப்பின் ஆன்லைன் மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் புதின் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசியபோது சர்வதேச வர்த்தகத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் நிலையில், பொருளாதார நடவடிக்கைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தடைகளை அதிகரிப்பதும், பரிமாற்றத்தை சிக்கலாக்குவதும் எந்த பலனும் அளிக்காது என்று அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பை ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்தார்.
அமெரிக்க டாலரின் தேவையை குறைத்து கொண்டாலே, டிரம்ப் விதிக்கும் வரியின் பாதிப்புகளை எளிதில் சமாளிக்க முடியும் என்பதால், பிரிக்ஸ் நாடுகளுடன் சொந்த கரன்சியில் அதிகளவில் வர்த்தகம் செய்ய இந்தியா விரும்புவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யாவிடம் வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கு 90% இந்திய கரன்சி வழங்கப்படுகிறது. இதேபோல் சீனாவுடன் வர்த்தகம் விரிவுப்படுத்தப்பட உள்ள நிலையில், அங்கும் இதே கரன்சியை பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.