திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்காக கோகோ பிரண்ட்ஸ் திட்டத்திற்கு இடம் வேண்டும்
*கல்கி சுப்பிரமணியம் கோரிக்கை
கோவை : சகோதரி அறக்கட்டளை இயக்குனரும், நிறுவனருமான கல்கி சுப்பிரமணியம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சகோதரி அறக்கட்டளை சார்பாக, திருநங்கைகள் சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கிராமப்புற திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்காக தேங்காய் சிரட்டையில் பல்வேறு பொருட்கள் செய்யும் பயிற்சி எடுத்த பின் கோகோ பிரண்ட்ஸ் என்ற திட்டம் தொடங்கியுள்ளோம்.
இந்த திட்டத்தின் மூலம் உடனடியாக 12 திருநங்கைகள் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் மூலம் கிராமப்புறங்களில் வாழும் ஏராளமான திருநங்கைகள் தொழில் திறன் பயிற்சி மூலம் நிலையான வாழ்வாதாரத்தைப் பெறும் வாய்ப்பு உருவாகும்.
இந்த சமூக முன்னேற்ற முயற்சியை நடைமுறைப்படுத்த, எங்களுக்கு பொள்ளாச்சி கிராம புறத்தில் 5 சென்ட் இடம் வழங்கினால் உதவியாக இருக்கும் என தங்களிடம் வேண்டுகிறோம். அந்த இடத்தில் கோகோ பிரண்ட்ஸ் திட்டத்தை செயல்படுத்தி, திருநங்கைகள் சமூகத்திற்கு வேலைவாய்ப்பு, தொழில் திறன், மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் ஏற்படுத்துவவோம்.
அதேபோல திருநங்கைகளுக்கு அவர்களின் வறுமையை கருதி அரசு சிறு வீடு கட்டுவதற்கு நிலப்பட்டா வழங்கியது. ஆனால் பொருளாதார சூழல் காரணமாக அவர்களுக்கு வீடு கட்ட கடந்த 10 ஆண்டுகளாக முடியவில்லை. அவர்களுக்கு சகோதரி அறக்கட்டளை மூலம் வீடு கட்டி தர முடிவு செய்துள்ளோம். எனவே திருநங்கை பட்டாதாரர்களுக்கு வீடு கட்டித்தர ஏதுவாக கால அவகாசத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடித்து தருமாறு கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.