‘டிரான்ஸ்கதீட்டர் எட்ஜ்-டு-எட்ஜ் ரிப்பேர்’ இதய வால்வு கசிவால் பாதிக்கப்பட்ட 65 வயது பெண்ணுக்கு சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை
சென்னை: இதய வால்வு கசிவால் பாதிக்கப்பட்ட 65 வயதான பெண்ணுக்கு ஈரிதழ் வால்வுக்கான ‘டிரான்ஸ்கதீட்டர் எட்ஜ்-டு-எட்ஜ் ரிப்பேர்’ சிகிச்சையை மேற்கொண்டு காவேரி மருத்துவமனை சாதனை படைத்திருக்கிறது. முதன்மை வால்வு இதழ் குறைபாடு மற்றும் இதய கீழறை செயலிழப்பு (வால்வில் பலவீனம் மற்றும் இதயத்தின் செயல்திறன் குறைதல்) ஆகியவற்றின் காரணமாக கடுமையான இதய ஈரிதழ் (மைட்ரல்) வால்வு கசிவால் பாதிக்கப்பட்ட 65 வயது பெண், மோசமடைந்து வரும் மூன்றாம் நிலை அறிகுறிகளுடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சையை அவருக்கு செய்வதில் அதிக ஆபத்துக்கான வாய்ப்புகள் இருந்ததால் காவேரி மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சைக்கான நிபுணர்கள் குழு, ஈரிதழ் வால்வுக்கான ‘டிரான்ஸ்கதீட்டர் எட்ஜ்-டு-எட்ஜ் ரிப்பேர்’ சிகிச்சை (TEER) முறையை இந்நோயாளிக்காக தேர்ந்தெடுத்தது. இந்த முறையில், தொடைப் பகுதியில் உள்ள ரத்த நாளம் வழியாக ஒரு கிளிப் செலுத்தப்பட்டு, செயலிழந்த இதய ஈரிதழ் வால்வு இதழ்கள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. 72 மணி நேரத்திற்குள் சீரான உடல்நிலையுடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மருத்துவர் அனந்தராமன் கூறியதாவது: கடுமையான இடது இதய கீழறை செயலிழப்பு மற்றும் தீவிரமான இதய ஈரிதழ் வால்வு கசிவு உள்ள நோயாளிகளுக்கு மைக்கிளிப் கருவியைப் பயன்படுத்தும் ‘டிரான்ஸ்கதீட்டர் எட்ஜ்-டு-எட்ஜ் ரிப்பேர்’ சிகிச்சை செய்யப்பட்டது. வழக்கமான அறுவை சிகிச்சைக்கு தகுதியற்ற நோயாளிகளுக்கு, இச்சிகிச்சை முறை இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு பாலமாகவும், குணமடைவதற்கான ஒரு பாலமாகவும், அல்லது எதிர்கால மேம்பட்ட சிகிச்சைகளுக்கு தகுதி பெறுவதற்கான ஒரு இணைப்பு பாலமாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் அவர்கள் மீண்டும் சீரான உடல்நிலையை அடையவும் மற்றும் பிற சிகிச்சைகளுக்கு தகுதி பெறவும் இயலும். தென்னிந்தியாவில் முதன்முறையாக இந்த சிகிச்சை நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.