ரயிலில் சிக்கி தலை துண்டானது ராணுவ வீரர் கண்ணெதிரே மனைவி பலி: காட்பாடியில் வழியனுப்ப வந்தபோது சோகம்
வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்தபோது, ஐடி கார்டு கொடுக்க ஓடிச்சென்று தண்டவாளத்தில் விழுந்து, ராணுவ வீரர் கண்ணெதிரே ரயிலில் சிக்கி தலை துண்டாகி மனைவி பலியானார். வேலூர் மாவட்டம் பொய்கை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்(36), ராணுவ வீரர். இவரது மனைவி சிந்து(32). தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பிரபாகரன் விடுமுறையில் செகந்திராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு சில நாட்களுக்கு முன் வந்தார். விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல நேற்று முன்தினம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது, அவரது மனைவி சிந்துவும் அவருடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார். சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரபாகரன் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு சபரி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர், பிரபாகரன் ரயிலில் ஏறினார். இந்நிலையில் ஐடி கார்டு தன்னிடம் இருப்பதை சிந்து தாமதமாக அறிந்துள்ளார். அப்போது ரயில் புறப்பட்ட நிலையில், சிந்து கணவரை அழைத்தபடி ஓடிச்சென்று அவரிடம் அடையாள அட்டையை கொடுக்க முயன்றார். அப்போது சிந்துவின் கை ரயிலில் பட்டதால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.
அந்த ரயில் சக்கரம் ஏறியதில் சிந்துவின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது, இதைக்கண்ட பிரபாகரன் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். பின்னர், கீழே இறங்கி ஓடி வந்து மனைவியின் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.
தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிந்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணெதிரே தலை துண்டாகி மனைவி உயிரிழந்ததை பார்த்து கணவன் கதறி அழுத சம்பவம் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.