ரயில் பயணிகள் பாதுகாப்பில் அச்சம்: நவீன பாதுகாப்பு அமைப்புகள் 90% பகுதிகளில் இல்லை; ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்
சென்னை: ரயில் பயணிகள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்தன் கிருஷ்ணன் எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அதிகாரிகள் அளித்த அதிகாரப்பூர்வ பதிலே இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது. மின்னணு இன்டர்லாக்கிங், தானியங்கி தொகுதி சமிக்ஞை (ABS), ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு (TPWS), இந்தியாவின் சொந்த ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பான கவாச் போன்ற உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு அமைப்புகள் தெற்கு ரயில்வேயின் 5,084 கி.மீ. பாதைகளில் பெரும்பான்மையான இடங்களில் இன்னும் “வரைபடத்தில்தான்” உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
மிக முக்கியமான அதிர்ச்சி தகவல்கள்: 492 ரயில் நிலையங்களில் வெறும் 250 இடங்களில் மட்டுமே மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு உள்ளது. மீதமுள்ள 242 நிலையங்கள் (49.2%) இன்னும் பழைய மெக்கானிக்கல் / கைமுறை முறையையே நம்பி இயங்குகின்றன. தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு 5,084 கி.மீ. தேவை இருந்தும் 495.73 கி.மீ. மட்டுமே (9.75%) நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 90% க்கும் மேற்பட்ட பாதைகள் இன்னும் கையேடு சிக்னல் முறையையே பயன்படுத்துகின்றன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கவாச் அமைப்பு 5,084 கி.மீ. தேவை இருந்த நிலையில், 1,984 கி.மீ. மட்டுமே பணி நடந்து வருகிறது. மீதமுள்ள 3,100 கி.மீ. (61%) இன்னும் தொடங்கப்படவே இல்லை. ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு சென்னை காட்பாடி, சென்னை அரக்கோணம் ஆகிய இரு பிரிவுகளில் மட்டுமே செயல்படுகிறது. மற்ற எல்லா முக்கிய பாதைகளும் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசு அறிவிப்பும் நிஜமும்: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பலமுறை 2025க்குள் கவாச் முழு அளவில் ‘‘2030-க்குள் 100 சதவீத இன்டர்லாக்கிங்” என அறிவித்தார். ஆனால் தெற்கு ரயில்வேயின் தற்போதைய முன்னேற்ற விகிதம் (ஆண்டுக்கு 300-400 கி.மீ. கவாச்) பார்த்தால் 2035க்கு முன்பு கூட இந்த பணிகள் முடியாது என்று தெரிகிறது. நிதி ஒதுக்கீடு, ஒப்பந்த பிரச்னை, நிலம் கையகப்படுத்துதல் தாமதம், தொழில்நுட்ப பற்றாக்குறை ஆகியவை தொடர்ந்து தடைகளாக உள்ளன. தெற்கு ரயில்வே என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் உயிர்நாடி. தினசரி 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இதன் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கின்றனர். ஆனால் இன்றைக்கும் அவர்களது உயிர் பாதுகாப்பு ஒரு கேட்மேனின் கவனமும், ஒரு சிக்னல்மேனின் விழிப்புணர்வும் மட்டுமே தீர்மானிக்கின்றன, நவீன தொழில்நுட்பம் அல்ல. இந்த ஆர்டிஐ தகவல்கள் ஒரு கடுமையான எச்சரிக்கையாக தமிழ்நாட்டிற்கு உள்ளன. அடுத்த பெரும் ரயில் விபத்து எச்சரிக்கை இல்லாமல் வரப்போகிறது. ஏனெனில் எச்சரிக்கை அமைப்புகளே இல்லை
* இந்த பின்னடைவால் யாருக்கு என்ன ஆபத்து?
இன்டர்லாக்கிங் இல்லாத நிலையத்தில் கேட்மேன் ஒருவர் மட்டுமே கேட்டை மூடுகிறார், சிக்னலை இயக்குகிறார். ஒரு நொடி தாமதம் அல்லது கவனக்குறைவு என்றால் ரயில் நேரடியாக சாலை வாகனங்கள் மீது மோதும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர எல்லையில் மட்டும் 120க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் இதுபோன்ற கேட்மேன் தவறுகளால் பறிபோயின. கவாச் இல்லாததால் ரயில் மோதல், சிக்னல் பாஸ் செய்தல் போன்றவை எளிதில் நிகழலாம். ஒடிசா பாலாசோர் விபத்து (292 உயிர்) போன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழ்வதற்கான எல்லா வாய்ப்புகளும் தெற்கு ரயில்வேயில் உள்ளன.
* மின்னணு இன்டர்லாக்கிங்
492 நிலையங்களில் 242 (49%) இன்னுமில்லை
* தானியங்கி சிக்னல்
5,084 கி.மீ. தேவை 495 கி.மீ. மட்டுமே நிறைவு (9.75%)
* கவாச்
5,084 கி.மீ. தேவை 3,100 கி.மீ. இன்னும் தொடங்கப் படவில்லை (61%)
சென்னை புறநகர் பிரிவுகளில் மட்டுமே உள்ளது. பயணிகள், சாலை ஓட்டிகள், கேட்மேன்கள் மூன்று தரப்பும் மனித தவறை மட்டுமே நம்பி உயிரை பணயம் வைத்துள்ளனர். TPWS