முதல்முறையாக ரயில் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி.. 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!!
டெல்லி: நாட்டிலேயே முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. இந்த ஏவுகணை, சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைக்கும் உள்நாட்டு அக்னி ஏவுகணைகள், கடந்த 2011 முதல் பயன்பாட்டில் இருக்கின்றது. தொடர்ந்து அடுத்த தலைமுறை ஏவுகணைகளை டிஆர்டிஓ வடிவமைத்து வருகின்றது.
இந்தியாவிடம் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளில் அக்னி - பிரைம் மிகவும் முக்கியமானது. இந்த வகை ஏவுகணைகள் 5,000 கி.மீ. தொலைவு வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இந்த நிலையில், 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும் அக்னி - பிரைம் ஏவுகணையை முதல்முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலில் வைத்து, நேற்றிரவு ஏவி சோதனை டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ராஜ்நாத்சிங் பதிவிட்டிருப்பதாவது; இடைநிலைத் தூரம் தாக்கும் அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த DRDO, வியூகப் படைகள் கட்டளை மற்றும் ஆயுதப் படைகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிகரமான சோதனை மூலம் ரயிலிலிருந்து ஏவுகணையை ஏவும் கேனிஸ்டரைஸ் செய்யப்பட்ட ஏவுதல் அமைப்பைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.