ஓடும் ரயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?: அவசர சங்கிலியை இழுத்தால் ரூ.5,000 அபராதம்!!
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அது போல் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதையும் பார்க்கலாம். ஓடும் ரயிலில் பயணிக்கும் போது உங்கள் செல்போன், பர்ஸ் அல்லது வேறு ஏதேனும் பொருள் கீழே விழுந்தால், பதட்டப்படாமல் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகளை ரயில்வே அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் பின்வருமாறு;
1. உடனடியாக கம்ப எண்ணைக் குறித்துக் கொள்ளவும்:
உங்கள் பொருள் எந்த இடத்தில் கீழே விழுந்ததோ, அந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுவப்பட்டிருக்கும் கம்பத்தில் (Electrical Pole/ Kilometer Stone) மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் எண் மற்றும் குறியீட்டை (உதாரணமாக: 47/12) உடனடியாக குறித்துக் கொள்ளுங்கள். இந்த எண், உங்கள் பொருள் விழுந்த இடத்தைத் துல்லியமாகக் கண்டறிய அதிகாரிகளுக்கு உதவும் மிக முக்கிய ஆதாரம்.
2. ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளியுங்கள்:
நீங்கள் குறித்து வைத்த கம்ப எண்ணை உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும். TTE (டிக்கெட் பரிசோதகர்) அல்லது ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரியை அணுகி, விழுந்த பொருளின் விவரம் (மாடல், நிறம்) மற்றும் நீங்கள் குறித்துக்கொண்ட கம்ப எண்ணை ஒப்படைக்கவும்.
3. உதவி எண்களுக்கு அழைக்கவும்:
ரயில்வே ஹெல்ப்லைன் 139 அல்லது RPF உதவி எண் 182 ஆகியவற்றுக்கு அழைத்துத் தகவல் தெரிவிக்கலாம்.
4. புகார் பதிவு செய்யுங்கள்:
அடுத்த ரயில் நிலையத்தை அடைந்தவுடன், அங்குள்ள ரயில்வே காவல் படை (RPF) அல்லது அரசு ரயில்வே போலீஸ் (GRP) அலுவலகத்திற்குச் சென்று முறையான புகார் (FIR) பதிவு செய்ய வேண்டும். புகாரை பதிவு செய்யும்போது, ரயில் எண், இருக்கை எண், கம்ப எண் மற்றும் உங்கள் அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுவார்கள். செல்போன் மீட்கப்பட்டவுடன், உரிய அடையாளச் சான்று மற்றும் உரிமையை நிரூபிக்கும் தகவல்களைச் சரிபார்த்த பிறகு, உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
நீங்கள் செய்யக் கூடாத விஷயம்:
அவசர சங்கிலியை இழுக்க வேண்டாம்: செல்போன் விழுந்ததற்காக அவசரமாக சங்கிலியை (Alarm Chain) இழுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
