ரயில் முன்பதிவு டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற அனுமதி: ஜனவரி முதல் புதிய வசதி அறிமுகம்!!
டெல்லி: ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பயண தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. இந்தியா முழுவதும் இருக்கும் பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணமே இருக்கிறது. திட்டமிட்ட நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்த நிலையில், பயண தேதியை மாற்ற வேண்டுமானால், டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு புதிதாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் ஜனவரி முதல் எந்தவித கட்டணமும் இல்லாமல் ரயில்வேயில் ஆன்லைனில் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்.
மேலும், இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ள முடியும். வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். வேறு கூடுதல் கட்டணங்கள் கிடையாது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.