கோயம்பேடு மார்க்கெட் சிறப்பு சந்தையில் போக்குவரத்து நெரிசல்: வியாபாரிகள், பொதுமக்கள் தவிப்பு
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் மூலம் சிறப்பு சந்தை நடைபெற்று வருகிறது. இன்று காலை சிறப்பு சந்தை வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்றதால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்தனர். மேலும் ஆயுத பூஜை முன்னிட்டு சிறப்பு சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்திருந்தவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்தநிலையில், கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி உத்தரவின்படி சிறப்பு அதிகாரி செல்வம் நாயகம் தலைமையில் போலீசார் சென்று போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் சிறப்பு அதிகாரி, போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ளாமல் இருந்தார் என்று வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது ஆயுதபூஜை பண்டிகை நெருங்கி வருவதால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.