போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓசூரில் ரூ.138 கோடியில் மேலும் ஒரு ரிங் ரோடு: தமிழ்நாடு அரசு திட்டம்
சென்னை: ஓசூரில் ரூ.138 கோடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை பொறுத்தவரையில் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் 13வது தொழில் நகரமாக உள்ளது. ஓசூர் அதிவேக தொழில் வளர்ச்சி நகரமாக மாறி உள்ளதால், அங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த நகராமானது கர்நாடகவிற்கும் தமிழகத்தை இணைக்கும் நகரமாக உள்ளது. மேலும் இதனால் இந்நகருக்குள் தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அங்குள்ள சாலை மற்றும் புறவழிச்சாலைகளிலும் கடுமையான வாசன நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஓசூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சீத்தாராம்மேட்டிலிருந்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனை வரை, 8 கி.மீ., துாரத்திற்கு இன்னர் ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நகரில் நெரிசலுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கவில்லை. இதனால் பெங்களூருவில் இருந்து வரும் வாகனங்கள், ஓசூர் நகருக்குள் வராமல், தமிழக எல்லையான ஜூஜூவாடியிலிருந்து, பேரண்டப்பள்ளிக்கு செல்லும் வகையில், ரிங்ரோடு அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, ரூ.320 கோடி, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இச்சாலையில் வரும், 11 கிராமங்களில், ஆறு கிராமங்களில் நில எடுப்பு பணி முடிந்துள்ளது. ஐந்து கிராமங்களில் நில எடுப்பு நடக்கிறது.
இதற்கிடையே, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம், பத்தலப்பள்ளியில், ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு புறநகர் பஸ்களை இயக்கும் போது, அவை ஓசூர் நகருக்குள் சென்று, குறிப்பிட்ட பகுதிக்கு சென்றால், நகரில் நெரிசல் அதிகரிக்கும். இப்பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும், ஓசூர் நகருக்குள் சென்று தான் செல்ல வேண்டியுள்ளது.
அதனால், பத்தலப்பள்ளி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கி, ராயக்கோட்டை சாலையில் புதிதாக கட்டப்படும் ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வழியாக, கெலமங்கலம் சாலையிலுள்ள ஜொனபெண்டா வரை, 6 கி.மீ., துாரத்திற்கு புதிய ரிங்ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.138 கோடியில் ரிங் ரோடு அமைப்பதற்கான திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 44ல் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஓசூர் அவுட்டர் ரிங் ரோடு திட்டமிடப்பட்டுள்ளது.